மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுக்க இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ரணில் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்து செய்துள்ளது.

1 year ago


மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் ஜுன் மாதம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்துசெய்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த திட்டத்திற்கான அனுமதியை இரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்புகள் உருவானதுடன் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுசூழல்; அறக்கட்டளை நிறுவனம் உட்பட பல அமைப்புகள் இந்த திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுசூழல் மதிப்பீட்டில் குறைபாடுகள் உள்ளன என்பதாலும் மன்னார் வலசப் பறவைகளிற்கான பகுதி என்பதாலும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தன.

மன்னார் ஆயர் உட்பட மன்னார் மக்களும் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த திட்டத்தை இரத்துச் செய்வேன் என உறுதியளித்திருந்த அனுர குமாரதிசநாயக்க இலங்கையில் காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக சர்வதேச கேள்விப் பத்திரத்தை கோருவேன் என தெரிவித்திருந்தார்.